Tuesday, March 6, 2012

தூங்கி தூங்கி வழியலாம் வாருங்கோ...!!



முதல் பதிவாக எதை எழுதலாம் என எண்ணி எண்ணியே இன்றைதினம் நடுச்சாம்வரை எதுவும் எழுதாமலேயே பத்து பதினைந்து பேப்பரை கிழித்துவிட்டேன். தூக்கமும் வரவில்லை... என்னசெய்வது என்று யோசித்தவேளையிலேயேதூக்கம்பற்றிய குட்டிப் பதிவொன்றை எழுதும் எண்ணம் தோன்றியது. அது தலையூடு புகுந்து கைவிரலூடு நெழிந்து வீட்டுக்கணினியிலே எழுத்துக்கள் பதிய ஆரம்பித்தன.

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இது மனிதனுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல, மாறாக பறவை விலங்குகளுக்கும்கூட தூக்கம்என்பது இன்றியமையாததுஒரு நாயை தூங்கவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தால் ஐந்து நாட்களின் பின் அது இறந்துவிடுமாம். ஐந்து நாட்களுக்கு பட்டினி கிடந்தால்கூட நாய் சாகாது. ஏன் நாம்கூட ஒருநாள் தூங்காது இரவு விழித்திருந்தால்.. மறுநாள் மிகுந்த களைப்பு, சோர்வு, தலைக்குத்து, கண்குத்து என சொல்ல முடியா அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

(சின்ன வயசில நம்ம யாழ்ப்பாண யுத்தகாலத்தில 90, 95 ம் ஆண்டுகாலப்பகுதியில நாலஞ்சு குடும்பங்கள் சேர்ந்து காசு போட்டு ஜெனரேட்டர், ரி.வி, டெக் வைடகைக்கு பிடிச்சு ரெண்டு பழசு, ரெண்டு புதுசு என ஒரு இரவுமுழுதும் கண் பிதுங்க பிதுங்க நாலு படம்பாத்து அப்பாவவின்ர கையால முதுகில குத்து வாங்கின அனுபவநேரம் எனக்கு இது விதிவிலக்கா இருந்திருக்கலாம்)

பொதுவாக பறவைகளின் தூக்கமுறை எனக்கு ஆச்சரியத்தை தருவதுண்டு. அம்மா
வளர்த்த கோழிக்கூட்டம் பொழுதுசாயிற நேரம் வேப்பமரத்தில ஏறி நுனிக்கொப்பில
சமநிலை குழம்பாம தூங்கிற முறைய பாத்து பலதடவ நான் ஆச்சரியப்பட்டதுண்டு.
கீழ நிண்டு குச்சியால குத்தினாலும்கூட ரெண்டு ஸ்ரெப் தள்ளிப்போய் லாவகமா திரும்பவும் தூக்கத்த தொடரும். கிளி, புறா, மைனா, குருவி, காகம் என நம் கண்ணில் நாளாந்தம் தெரிகின்ற பறவைகள்... தூங்கும்போது தமது இறகுகளை சிலிர்த்துக்கொண்டு கும்பலாக வைத்துக்கொள்ளும். அதற்கும் காரணமுண்டு...!! அவ்வாறு வைத்திருப்பதனால் இறகுகளுக்குள் காற்று புகுந்து பறவைகளின் உடல்வெப்பம் வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறதாம். எப்படித்தான் தூங்கினாலும் இவைகளின் கால்பிடிமானங்கள் பெரும்பாலும் தவறியதில்லை.

வாத்துக்களும், அன்னங்களும் தண்ணீரில் மிதந்துகொண்டே தூங்குகின்றனவாம். அவ்வாறாயின் குளிர்நாடுகளில் இரவு திடீரென நீர்மேற்பரப்புகள் உறைந்துவிட்டால் அதில் தூங்கும் அன்னங்கள் வாத்துகளின் நிலை என்ன...?? பனியுறைவில் மாட்டிக்கொள்வதை விட வேறு வழியில்லை என்றே எண்ணுகிறேன்.

சனிஞாயிறு தினங்களில் வேலை விடுமுறை என்ற சந்தோசத்தில் பாதம் முதல்தலைவரை போர்த்து அம்மா முதுகிலே தட்டி வைத்துச்சென்ற தேனீரில் எறும்புகள் ஜோடி ஜோடியாக தற்கொலை செய்துகொண்டதுகூட தெரியாமல் நித்திரைசெய்த நாட்களை இன்றும் எண்ணிப்பார்க்கிறேன். அம்மா என்னதான் சத்தம் போட்டாலும்கையது கொண்டு மெய்யது பொத்தி காலதுகொண்டு மேலது தழுவிதூக்கநிலை பிசகாது தூங்கும் திறமையும் நமக்குண்டு. ஆனால் சிறு சத்தம் கேட்டாலும் பறவைகள் விழித்துக்கொண்டு தமது கூட்டிலிருந்து பறந்தோடிவிடும்.  அவுஸ்ரேலியாவில் காணப்படுகின்றதவளைவாயன்என்கிற ஒரு பறவை சரியான கும்பகர்ணனாம். கையில் தூக்கி வைத்துக்கொண்டாலும்கூட அதன் தூக்கம் கலையாதாம்.
முயல்கள் 1மணிநேரத்திற்கு ஒருமுறை பத்து, பதினைந்து நிமிடங்கள் குட்டித்தூக்கம் போடுகின்றன. நீர்யானை மூக்குமட்டும் வெளியே தெரியும்படி நீட்டி தமது தலையை
பக்கத்திலுள்ள நீர்யானையின் முதுகிலே சாய்த்துக்கொண்டு தூங்குகின்றன. நாய்கள் பெரும்பாலும் காற்று வீசும் திசைக்கு நேராக மூக்கைவைத்து தூங்குவது வழக்கம்.
பூனைகள் தூங்குவதில் சோம்பேறித்தனம் காட்டினாலும் சொகுசான தூக்கத்தையேஅதிகம் விரும்புகின்றன.

இந்தநேரம்....பதிவு எழுதி முடியும் நேரம்.... எனக்கும் இப்ப கண்ணக்கட்டுது...!!
நான் அறிந்தவகையில் தூக்க முறையிலுள்ள சில சுவாரஸ்யங்களை உங்களோடு
இப்பதிவினூடாக பகிர்ந்துகொண்டேன். நீங்களும் இதைவிட பல சுவாரஸ்யங்களை
அறிந்திருப்பீர்கள். அவற்றையும் விரும்பினால் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
இது எனது முதல்பதிவு...!! பதிவு பிடிச்சிருந்தா கட்டாயம் கொமண்ட் போடுங்கோ...!!
பதிவு பிடிக்காட்டியும் கொமண்ட் போடுங்கோ...!!







Monday, November 21, 2011

ஓட்டம் ஆரம்பமாகிறது.

வடலிக்கூத்தனின் ஓட்டம் விரைவில் ஆரம்பமாகிறது. வலைப்பதிவு நண்பர்களின் அறிவுரையையும், ஆதரவுகளையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
வடலிக்கூத்தன்.